Published : 23 Oct 2024 05:43 PM
Last Updated : 23 Oct 2024 05:43 PM
தேனி: தீபாவளிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் சிறு குடில் அமைத்து அதில் வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.
சைவ மற்றும் அசைவ உணவுகளில் வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மசாலாதன்மை மற்றும் உணவுக்கு சுவையூட்டுவதில் இதன் பங்கு அதிகம். இதனால் பல உணவுகளில் வெங்காயம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இதன் தேவை இருப்பதால் விவசாயிகள் பலரும் இவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கொடுவிலார் பட்டி, கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம், ஓவுலாபுரம், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் அதிகளவில் தயாரிக்கப்படுவது வழக்கம். இதனால் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் இதன் விலை உயரும் நிலை உள்ளது. இதனைக் கணக்கிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை பல விவசாயிகள் விற்பனை செய்யவில்லை. இவற்றை தங்கள் விளைநிலங்களின் ஒரு பகுதியில் பண்டல் எனப்படும் சிறு குடில்களில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் மூங்கில் கம்பு வைத்து சுற்றிலும் வலை அமைத்து அதில் வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளனர்.மழைநீர் உள்ளே வராதவாறு மேல்புறத்தில் தார்பாலின் கூரை அமைக்கப்பட்டுள்ளது. காற்று உள்ளே சென்று வெளியேறும் வகையில் இருப்பதால் இதில் சேமிக்கப்படும் வெங்காயமானது பல வாரங்களுக்கு அழுகிப் போகாமல் இருக்கும்.
இது குறித்து கோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர்ராஜ் கூறுகையில், “வெங்காயம் 90 நாள் பயிராகும். அறுவடை செய்ததும் விற்றால் உரிய விலை கிடைப்பதில்லை. தீபாவளிக்கு இதன் விலை பல மடங்கு அதிகரிக்கும். ஆகவே சருகை நீக்காமல் வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளோம். தேவைப்பட்டால் இதை விதையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று விவசாயி சங்கர் ராஜ் கூறினார்.
வியாபாரிகள் கூறுகையில், “ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழையினால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் வெங்காயத்தின் சில்லறை விலை ரூ.40 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.54 ஆக உயர்ந்துள்ளது. தீபாவளி நேரத்தில் இதன் விலை மேலும் உயரும்” என்று வியாபாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT