Published : 23 Oct 2024 05:12 PM
Last Updated : 23 Oct 2024 05:12 PM
மதுரை: மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விவரங்கள் குறித்து நீதித்துறை மற்றும் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் பெரியளவில் முரண்பாடு இருப்பதால் இரு துறையும் முரண்பாடுகளை சரி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பு குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு பாதுகாப்பு படை வீரர் ஜனார்த்தனன். இவர் கரோனா காலத்தில் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்புக்கு உட்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் மற்றும் இறுதி அறிக்கைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட நீதிபதிகளும், காவல்துறை தரப்பிலும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் காவல்துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் நீதிபதி, “நீதித்துறை மற்றும் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் படி குற்றப்பத்திரிக்கைகளின் எண்ணிக்கைகளில் பெரும் வேறுபாடு உள்ளது. 14 மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதிகளின் அறிக்கையின்படி 2 லட்சத்து 2694 குற்றப்பத்திரிகைகள் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 650 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையின் அறிக்கையின் படி 1 லட்சத்து 44 ஆயிரத்து ஒரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 12 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, காவல்துறை அறிக்கையை மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், நீதித்துறை அறிக்கையை காவல்துறைக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். அது தொடர்பான கருத்துக்களை நீதித்துறையும், காவல்துறையும் அக். 25-க்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக். 28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT