Published : 23 Oct 2024 04:17 PM
Last Updated : 23 Oct 2024 04:17 PM

சென்னை: போக்குவரத்து கழக நிலுவை பணப்பலன் கோரி போராடிய ஓய்வூதியர்கள் கைது

போராட்டம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் நிலுவை வைத்துள்ள பணப்பலன்களை வழங்கக் கோரி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அகவிலைப்படி உயர்வு, பணப்பலன், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை, பல்லவன் சாலையில் செயல்படும் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய அறக்கட்டளையை இன்று முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 96 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களும், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் ஓய்வு பெறும் நாளில் பிஎப், விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றுச் செல்கின்றனர். ஆனால், 24 மாதங்களாக போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன் வழங்காமல் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

சராசரியாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.20 லட்சம் பணப்பலன் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தபோதும், அரசு அமல்படுத்தவில்லை. தொடர்ந்து மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்துகிறது. ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதில்லை. நாங்கள் ரூ.1675 என்றளவில் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. மதுபாட்டில்களை பாதுகாக்க காப்பீடு வழங்கும் அரசு, மனித உயிர்களுக்கு கொடுக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். போராட்டத்தில், அமைப்பின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் வரதராஜன், மண்டலத் தலைவர்கள் வீரராகவன், சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x