Published : 23 Oct 2024 03:13 PM
Last Updated : 23 Oct 2024 03:13 PM
சென்னை: சென்னை 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் கடந்த அக்.1 முதல் 17-ம் தேதிவரை 286 மிமீ மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 91 மிமீ மழை கிடைக்கும். இப்போது வழக்கத்தை விட 214 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி நிலவரப்படி சென்னையில் 36 மிமீ மழை மட்டுமே கிடைத்தது. இது வழக்கத்தை விட 36 சதவீதம் குறைவு.
கடந்த 15-ம் தேதி அதிகனமழை பெய்த நிலையில் எண்ணூர் கத்திவாக்கத்தில் 23 செமீ, திரு.வி.க.நகர், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 22 செமீ, மணலியில் 20 செமீ, புழல் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் தலா 18 செமீ, மாதவரத்தில்17 செமீ, ராயபுரத்தில் 16 செமீ மழை பதிவாகிஉள்ளது.
இம்மாதத்தில் சென்னைக்கு 286 மிமீ மழை கிடைத்திருப்பதன் மூலம் 4.3 டிஎம்சி குடிநீர் கிடைத்துள்ளது. மாநகரின் குடிநீர் தேவைக்கு மாதம் ஒன்றுக்கு 1 டிஎம்சி தேவை. அப்படி எனில் 17 நாட்களில், 4 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நீர் கிடைத்துள்ளது. ஆனால், அந்த நீர் கடலில் போய் சேர்ந்ததேதவிர, அதை சேமிக்க அரசு தரப்பில் போதியநடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வட சென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 2015-ம்ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பின்,நீர்நிலை பாதுகாப்பு, புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், மழைநீர் சேமிப்பு மீதானவிழிப்புணர்வு அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில் சமூகஆர்வலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து மாநகரில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அவ்வாறு இதுவரை மாநகராட்சி சார்பில் 186-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்கள், 15 கோயில் குளங்கள் சீரமைக்கப்பட்டன.
கடந்த 15-ம் தேதி பெய்த கனமழையால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. அவற்றை உயர்திறன் கொண்ட மோட்டார்களை கொண்டு துரிதமாக வெளியேற்றி, கடலில் சேர்ப்பதில் மாநகராட்சி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் அந்த நீரை சேமிக்கவும், நிலத்தடி நீராக செறிவூட்டவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி சீரமைத்த நீர்நிலைகளை நிரப்ப எந்த திட்டமும் மாநகராட்சியிடம் இல்லை.
மாதவரம் மண்டலம் 32-வது வார்டில் புத்தகரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகனமழை பெய்தும், இதில் 1 அடி உயரத்துக்குகூட நீர் இல்லை. சுற்றியுள்ள பகுதிகளில் வெளியேற்றும் நீரை, இதுபோன்ற நீர்நிலைகளில் விடுவதற்கான கட்டமைப்புகளை மாநகராட்சி ஏற்படுத்தவில்லை.
மாநகராட்சி சார்பில் வில்லிவாக்கம் ஏரி அழகுபடுத்தப்பட்டுள்ளது. அந்த ஏரியில்கூட நீர் குறைவாகவே உள்ளது. குடியிருப்புகளில் தேங்கிய நீரை, இதுபோன்ற ஏரிகளுக்கு திருப்பி விட்டு, நிலத்தடி நீராகமாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எனவே வரும் நாட்களில் கிடைக்கும் மழைநீரையாவது, இதுபோன்ற நீர்நிலைகளில் விட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். கிடைக்கும் மழைநீரை சேமிக்க மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருவரும் பதில் அளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT