Last Updated : 23 Oct, 2024 01:54 PM

 

Published : 23 Oct 2024 01:54 PM
Last Updated : 23 Oct 2024 01:54 PM

தீபாவளிக்காக ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மானிய விலையில் தரப்படும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தீபாவளி பரிசாகத் தரப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி, தீபாவளியையொட்டி புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மானிய விலையில் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். அரசின் வடி சாராய ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையாக ரூ.1.45 கோடி வழங்கியுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 30 கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இலவச அரிசியை சிரமமின்றி பெறலாம்.

கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு மானிய விலையில் 10 பொருட்கள் வழங்கப்படவுள்ளன. ரூ.1000-ம் மதிப்புள்ள பொருட்களை ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் ரூ.500 மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் நமச்சிவாயம், ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x