Published : 23 Oct 2024 01:36 PM
Last Updated : 23 Oct 2024 01:36 PM
புதுச்சேரி: சர்க்கிள் டி பாண்டிசேரி நிர்வாகம் 14 ஆண்டுகளாக அரசுக்கு வாடகை தராததை அடுத்து அந்த நிர்வாகத்தை பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிர்வாகத்தை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், 14 ஆண்டுக்கான வாடகை நிலுவையையும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வடக்குப்புறம் 48,987 சதுரடி பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் சர்க்கிள் டி பாண்டிச்சேரிக்கு தரப்பட்டது. கடந்த 1938-ல் சமூக கலாச்சார முன்னேற்ற ஆலோசனைக்காக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ள இந்த மையத்தில் மதுபான விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றம் உள்ளது.
இந்த நிலையில், வாடகை பாக்கி தொடர்பாக கடந்த 2022 ஜூனில் பொதுப்பணித்துறை நிர்வாகம் சர்க்கிள் டி பாண்டிச்சேரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. 2010 முதல் வாடகை செலுத்தப்படாததால் இன்னும் 15 நாட்களில் அந்த இடத்தை கையகப்படுத்தவுள்ளதாக அப்போது அந்த நோட்டீஸில் பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சர்க்கிள் டி பாண்டிச்சேரி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.
ஆனால், இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேட உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை நடவடிக்கைக்கு எதிராக சர்க்கிள் டி பாண்டிச்சேரி தரப்பானது புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த பொதுப்பணித்துறை நிர்வாகம், ‘சர்க்கிள் டி பாண்டிச்சேரி நிர்வாகம் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. கடந்த 2010 முதல் வாடகையும் செலுத்தவில்லை. வாடகை செலுத்தாமல் 2010 முதல் இருப்பதால் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சர்க்கிள் டி பாண்டிச்சேரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இவ்விடம் புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு சொந்தமான இடம் என்பதால் கிளப் வெளியேற நோட்டீஸ் அளிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து சர்க்கிள் டி பாண்டிசேரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தள்ளுபடி செய்துள்ளார். சர்க்கிள் டி பாண்டிச்சேரி உள்ள இடம் புதுச்சேரி அரசுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ள அவர், வாடகை பாக்கி காரணமாக கிளப்பை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், “யூனியன் பிரதேச அரசு ஏழை மக்களுக்கான ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் அதிகளவு வருவாய் வந்தும் வாடகை பாக்கியை செலுத்தாமல் கிளப் உள்ளது. சமூக அல்லது கலாச்சார நடவடிக்கைகளில் குறிப்பாக, பிரெஞ்சு கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கிளப் ஈடுபட்டுள்ளது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. புதுச்சேரி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தவறாமல் அரசுக்கு வரிகளை முறையாக செலுத்தி வருகின்றனர்.
சர்க்கிள் டி பாண்டிச்சேரியை வெளியேற்றும் பொதுப்பணித்துறை உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு தவறாகவும், தகுதியற்றவையாகவும் கருதப்படுகிறது. கிளப் வளாகத்தின் உடைமைகளைத் தக்கவைத்து, இருக்கும் வரை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற சர்க்கிள் டி பாண்டிச்சேரி நோக்கம் தெளிவாகிறது. ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப்போக்குகள் சட்டத்தில் நிராகரிக்கப்பட வேண்டும், வாடகை பாக்கி நிலுவையை கிளப்பின் பொறுப்பாளர்களிடம் இருந்து முழுவதும் வசூலிக்கவேண்டும். அத்துடன் கிளப்பை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT