Published : 23 Oct 2024 12:34 PM
Last Updated : 23 Oct 2024 12:34 PM
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு மரியாதை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றித் தர அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டுமென்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின்மீது சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதற்கென தனி அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்த ஆணை உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில், நான்கு ஆண்டுகளாக குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க பல முறை வலியுறுத்தியதாகவும், அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சி ஆதிதிராவிட குடியிருப்புகளுக்கு சாலை, எரிமேடை மற்றும் சமுதாயக்கூடம் வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், இந்தக் கோரிக்கைகளை நேரில் சென்று வலியுறுத்த ஊராட்சித் தலைவர் சென்னையில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநரை சந்திக்கச் சென்றதாகவும், இவருடன் திருச்சி மாவட்டம், கிருஷ்ணாபுரம், கடலூர் மாவட்டம், சி. முட்லூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், செம்மரம்பாளையம் ஊராட்சித் தலைவர்களும் அவரவர்களது கோரிக்கைகளை நேரில் வலியுறுத்த வந்திருந்ததாகவும், ஆனால், நாள் முழுவதும் காத்திருந்தும் ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநரை சந்திக்க இயலவில்லை என்றும் தெரிவித்து தன்னுடைய மன உளைச்சலை பிரதாபராமபுரம் ஊராட்சித் தலைவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தச் செய்தி பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது. திமுக அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அரசு அலுவலகங்களை நாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சென்றாலே அவமரியாதை என்கின்ற நிலையில், “மக்களைத் தேடி மருத்துவம்", "இல்லம் தேடி கல்வி” என்றெல்லாம் சொல்லப்படுகிற திட்டங்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" போலும்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு மரியாதை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றித் தர அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும், உள்ளூரில் உள்ள அலுவலகங்களின் மூலமோ அல்லது கணினியின் மூலமோ அவர்களது கோரிக்கையின் நிலையை அறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT