Published : 23 Oct 2024 12:05 PM
Last Updated : 23 Oct 2024 12:05 PM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக இன்று காலை 100 அடியை மீண்டும் எட்டியது.
கேரளா, கர்நாடகாவில் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை 27-ம் தேதி 71-வது முறையாக 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஜூலை 30-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பால், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது.
பின்னர், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, நடப்பாண்டில் ஆகஸ்ட் 12-ம் தேதி மீண்டும் 120 அடியை எட்டியது. 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம், பாசனத்துக்கு நீர் திறப்பு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர் திறப்பால் நீர்மட்டம் சரிந்து கடந்த 13-ம் தேதி 89.26 அடிக்குச் சென்றது.
தற்போது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, அணைக்கு நீர்வரத்து ஒரு வாரமாக 15,000 அடிக்கு மேல் இருந்தது. கடந்த 19-ம் தேதி 18,384 கன அடியாகவும், 20-ம் தேதி 15,929 கன அடியாகவும், 21-ம் தேதி 18,094 கன அடியாகவும், நேற்று 17,586 கன அடியாகவும் அணைக்கான நீர்வரத்து இருந்தது.
தொடர்ந்து, இன்று (அக்.23) அணைக்கு நீர்வரத்து 29,850 கன அடியாக உயர்ந்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 16 கண் மதகினை நீர் தொட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7,500 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 88 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT