Published : 23 Oct 2024 04:16 AM
Last Updated : 23 Oct 2024 04:16 AM
சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் 43,683 பேருக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போனஸ் சட்டத்தின்கீழ் வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரிதொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
மேலும் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்றுமுதல் முறையாக, குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களாக இருப்பினும் நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின்கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 43,683 பணியாளர்களுக்கு ரூ.44.42 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன் எதிர்வரும் விழாக் காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT