Published : 23 Oct 2024 06:09 AM
Last Updated : 23 Oct 2024 06:09 AM

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

எனினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இருக்கை,படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், வெகுதூரம் பயணிக்கவேண்டியவர்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்கஆயத்தமாகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முன்னரே திட்டமிடுவோருக்கு சிக்கல் இல்லை. ஒரு மாதத்துக்கு முன் திட்டமிட்டால் கூட விரைவுபேருந்துகளில் இருக்கை கிடைப்பதில்லை.

தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 என்றளவில் கட்டணம் வசூலித்த பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு நிறைவடைந்துள்ளன. இந்த சூழலில், நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சமாக ரூ.1,795 வசூலிக்கப்படுகிறது. இது இருக்கை வசதி கொண்ட பேருந்துக்கான கட்டணம்.

படுக்கையை பொருத்தவரை ரூ.2,200 வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3,300 வசூலிக்கப்படுகிறது. இதுவே நாகர்கோவில் செல்ல அதிகபட்சமாக ரூ.4,400 கட்டணம்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, “ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணத்தை உரிமையாளர்கள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை” என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஆம்னி பேருந்துகளை தொடர்ந்துகண்காணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x