Published : 22 Oct 2024 11:31 PM
Last Updated : 22 Oct 2024 11:31 PM
மதுரை: மதுரையில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைதான். எங்களுக்குள் மோதலோ, முரண்பாடோ இல்லை. எதிர்க்கட்சிகள் நினைப்பதுபோல் எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மார்க்சி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 24-வது அகில இந்திய மாநாடு 2025 ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை மதுரையில் நடைபெறுவதை முன்னிட்டு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி எம்.பி தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றார்.
முன்னதாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து நவ.8-ம் தேதி 15-ம் தேதி நாடு தழுவிய கண்டன இயக்கம் நடைபெறுகிறது. இதற்காக கிராமங்களில் வாகனப்பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்துமானால் மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் பறிக்கப்படும். தமிழகத்தில் ஆளுநர் பதவி காலம் முடிந்தும் மாற்றவில்லை. மாநிலங்களில் ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களது கொள்கை. ஆளுநர் பதவியால் எந்த பிரயோஜனமும் இல்லை, பயனும் இல்லை.
பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசியல், அரசாங்கம் நடத்துகின்றனர். தமிழகத்தில் மாநில அரசும் ஏற்றுக்கொள்கிற ஒருவரை பாஜக அரசு நியமிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போதெல்லாம் மத்திய பாஜக அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்டோரின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
மதுரையில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைதான். எங்களுக்குள் மோதலோ, முரண்பாடோ இல்லை. எதிர்க்கட்சிகள் நினைப்பதுபோல் எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். துணை முதல்வர் மதுரையில் வந்து பட்டா கொடுக்கிறார். எங்களது கட்சி சார்பிலும் பட்டா கொடுங்கள் எனக் கேட்கிறோம். முன்னாள் முதல்வர் பழனிசாமியைப்போல் பாஜகவுக்கு அடிமையாக இருந்த கூட்டணிபோல் நாங்கள் இல்லை. பாஜகவுக்கு வாய்மூடி மவுனியாக இருந்தார். அவர் பாஜகவை தட்டிக்கேட்கும் நிலையில்லை.
எங்களது கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அவரவர் உரிமைகள், கொள்கைகளுக்காகவே போராடுவோம். இப்படித்தான் போராடுவோம் என திமுகவுக்கு தெரியும். மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என எங்களது கட்சி சார்பில் தமிழக முதல்வரிடம் கேட்பதில் என்ன குழப்பம் உள்ளது. ஆனால் பாஜகவை எதிர்த்து போராடுவதில் உறுதியாக உள்ளோம்” இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT