Published : 22 Oct 2024 07:13 PM
Last Updated : 22 Oct 2024 07:13 PM
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டு நூறாண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளாலும் மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் 2018-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். பாம்பன் புதி ரயில் பாலத்திற்கான தூண்கள், தண்டவாளங்கள், கர்டர்கள், பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள், முடிந்து கடந்த வாரம் மண்டபத்திலிருந்து புதிய ரயில் பாலம் வழியாக சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் நிறைவடைந்தது.
மேலும், இந்த புதிய பாலப் பணிகளால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண்டபம் வரையிலும் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று, பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக பாலம் கட்டும் பணிகள் தாமதமாகின. 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழைய பாம்பன் ரயில் பாலம் உறுதி தன்மையை இழந்ததையடுத்து, ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு புதிய ரயில் பால பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தற்போது புதிய ரயில் பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்ட பின்னர், புதிய பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படுவதற்கான அதிகாரபூர்மாக தேதியும் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய பாம்பன் ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அப்துல் கலாம் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்” என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT