Published : 22 Oct 2024 06:14 PM
Last Updated : 22 Oct 2024 06:14 PM
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி.நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு வசதியாக பொது மக்கள் புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை உட்பட அனைத்து வணிக வீதிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சென்னை போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மாம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சென்னை காவல் ஆணையர் அருண் இன்று (அக்.22) காலை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை ஆகிய 3 இடங்களில் சிறப்பு கட்டுபாட்டு அறைகளை அமைத்துள்ளோம். கடந்த வாரம் மழை மீட்பு பணிக்காக சென்னையில் 35 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைத்திருந்தோம். அது சிறப்பாக செயல்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
அதேபோன்று தற்போது தீபாவளியை முன்னிட்டும் மக்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம். தி.நகரில் மட்டும் 64 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தே கூட்டம் முழுவதையும் கண்காணிக்கலாம். மேலும், குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்துக் குற்றவாளிகளின் தரவுகளையும் கொண்ட முக அடையாள தொழில் நுட்பம் (எஃப்ஆர்எஸ்) செயலி கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகள் கூட்டத்துக்குள் நுழைந்தால் அந்த தொழில் நுட்பம் எங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும். நாங்கள் அவர்களை கைது செய்து விடுவோம். மேலும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு சாதாரண உடையில் 15 ஆண் மற்றும் பெண் காவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் தி.நகரில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலைகளில் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது பெயர் மற்றும் பெற்றோரின் செல்போன் எண் கொண்ட பிரத்யேக ‘டேக்’ (கைப்பட்டை) கை மணிக்கட்டில் கட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அவசர பயன்பாட்டிற்காக 2 செல்போன் எண்கள் (73585 43058, 84386 69822) உருவாக்கப்பட்டும்.
2 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் அவசர கால பயன்பாட்டுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட காவல் துறை சார்பில் அனைத்தையும் செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். அப்போது, கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர்கள் சிபி சக்கரவரத்தி, மகேஷ் குமார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT