Published : 22 Oct 2024 05:22 PM
Last Updated : 22 Oct 2024 05:22 PM

ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே சீரமைக்கப்படும் குளம்: அதிகாரிகள் மீது முடிச்சூர் மக்கள் கடும் அதிருப்தி

ஆக்கிரமிப்பை அகற்றாமல் குளத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள். | படம்: எம். முத்துகணேஷ் |

தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சியில் உள்ள ரங்க நகர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், குளத்தின் அளவை குறைத்து சீரமைக்கப்படுவதால், அரசு பணம் ரூ.4 கோடி வீணாவதாக பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சி ரங்க நகரில் சுமார் 4.22 ஏக்கர் பரப்பளவில்,குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவந்தது. அதேபோல் அந்த பகுதி விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்த குளம் தற்போது கழிவுநீர் தேங்கும் குளமாக மாறியது. பராமரிப்பில்லாமல் குப்பை, பிளாஸ்டிக் தேங்கி, சீர்கெட்டுப்போயுள்ள இந்த குளத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.4 கோடி செலவில், குளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தூர்வாரி ஆழப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, முதியோருக்கான உடற்பயிற்சி கருவிகள், வாகன நிறுத்தம், இருக்கை, பயோ டாய்லெட், நடைபாதை, மிதக்கும் நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.

இந்நிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், குளத்தை சுருக்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மீதியுள்ள இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிகாரிகளின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில்கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, பணிகளை சீர்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபால கண்ணன்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெ.கோபால கண்ணன் கூறியதாவது: குளத்தில் வண்டல் மண்ணை மட்டும்எடுத்துவிட்டனர். ஆனால், ஆழப்படுத்தவில்லை. கரையை குளத்தின் உள்ளே தள்ளி அதன் மீது நடைபாதை அமைக்கின்றனர். இதனால் மழைநீர் தேங்குவது குறைந்து, கரை பலவீனம் அடையும். எனவே, குளத்தை முறையாகஆழப்படுத்தி, அகலப்படுத்தி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த குளத்தை நம்பிசுமார் 4.5 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. குளத்தில் தண்ணீர் இருப்பதால் விவசாயம் நடக்கிறது. குளம் சுருக்கப்பட்டால் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். விவசாயமும் செய்ய முடியாது. கீழ் நிலை அதிகாரிகள் முதல் முதல்வர் வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், விவசாய நிலம் உள்ள பகுதியில் சாலை வசதி இல்லை. டிராக்டர், அறுவடை வாகனம் செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்தோம் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x