Published : 22 Oct 2024 02:29 PM
Last Updated : 22 Oct 2024 02:29 PM
சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தி்ன் பூர்வீக தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை தட்டிப் பறிக்கும் அருந்ததியருக்கே அனைத்து இடங்களையும் தாரை வார்க்கும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு தலா 10 ஏக்கர் நிலம் வழங்கி அந்த ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலையிலேயே நிலை நாட்ட வேண்டும். டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடி பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும். அந்நிய முதலீட்டின் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையை மட்டும் மையமாக வைத்துத் தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாக தொடங்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களுக்கு எதிராகவும், வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். தென் தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள மற்றும் வருங்காலத்தில் தொடங்கப்படவிருக்கும் தொழிற்சாலைகளில் கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே தென் தமிழக இளைஞர்களை பயன்படுத்தும் போக்கினை தடுத்து, உயர் பதவிகளில் முன்னுரிமை தர வேண்டும்.
அதற்கான விதிமுறைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உருவாக்க வேண்டும். இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் நவ.7-ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...