Published : 22 Oct 2024 06:05 AM
Last Updated : 22 Oct 2024 06:05 AM

அறநிலைய துறையை பக்தர்கள் பாராட்டுகின்றனர்: இலவச திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 379 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

விழாவில் முதல்வர் பேசியது: திமுக ஆட்சிக்கு வந்து, நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு,இந்து சமய அறநிலையத் துறைநிகழ்ச்சிகளில்தான் அதிகம் பங்கேற்றுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 10,238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.1,103 கோடி நிதியில் 9,163 பணிகள் கோயில்களில் தற்போது நடந்து வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6,792கோடி மதிப்பிலான 7,069 ஏக்கர்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டு பழமையான 2,774 கோயில்களில் ரூ.426.62கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. ராமேசுவரம் - காசிக்கு 500 மூத்த குடிமக்கள், அறுபடை வீடுகளுக்கு 1008 மூத்த குடிமக்கள், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 1,003 பக்தர்கள், புரட்டாசிமாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,014 பக்தர்கள் ஆன்மிகப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

9 கோயில்களில் நாள் முழுவதும்அன்னதான திட்டம், 760 கோயில்களில் ஒருவேளை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.257.22 கோடி மதிப்பிலான 442 கிலோ சுத்த தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வட்டி தொகை ரூ.5.79 கோடியை கோயில்களுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இதையெல்லாம் உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், பக்தியை தங்கள் பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்தி வருபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் தவத்திரு சிதம்பரநாத ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், சென்னைமேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x