Published : 22 Oct 2024 05:30 AM
Last Updated : 22 Oct 2024 05:30 AM
சென்னை: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த அக்.10-ம் தேதி காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முரசொலி செல்வத்தின் படத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையில் பேசியதாவது: முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. செல்வத்துக்கு இரண்டாம் தாயாக இருந்து வளர்த்தவர் கருணாநிதி.
பள்ளியில் படித்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்கு துணையாக இருந்தவர் முரசொலி செல்வம். மாநாடு, பொதுக்கூட்டம், கழக நிகழ்ச்சிகள் என்றால், முதல் நாளே என்னை அழைத்து எப்படி பேச வேண்டும் என பயிற்சி அளித்தவர்.
முரசொலியில் வந்த 100 கட்டுரைகளை தொகுத்து ஒரு புத்தகத்தை செல்வம் எழுதியிருக்கிறார். அதில் எங்களை பற்றியும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதை பொக்கிஷமாக என் மனதில் பதிய வைத்துக் கொள்வேன்.
முரசொலி செல்வம் பெயரில் விரைவில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் பரிசுகள் வழங்குவது, அந்த பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறோம். அதேபோல், திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கையும் நிறைவேற்றப்படும். இ்வ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வர் பேசும்போது, இடையிடையே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இதைப் பார்த்ததும் முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டனர்.
தி.க.தலைவர் கி.வீரமணி: தற்போதைய அதிநவீன தொழில்நுட்ப முறையான செயற்கை நுண்ணறிவு மூலம் திராவிட இயக்கத் தலைவர்களை பற்றிய தகவல்களை மக்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். முரசொலி செல்வம் பெயரில் திராவிட இதழியல் பயிற்சி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும்.
`இந்து' என்.ராம்: பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பத்திரிகை சுதந்திரம் மதிக்கப்படுவதில்லை. பத்திரிகையாளர்களை எதிரிகளாக நடத்துவதுடன், சிறையிலும் அடைக்கின்றனர். இந்த கடுமையான சூழலில் செல்வம்தான் பத்திரிகைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
நடிகர் சத்யராஜ்: கருணாநிதியின் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடித்தபோது, எவ்வித பதற்றம், சிரமும் இல்லாமல் நடிப்பதற்கு முரசொலி செல்வம் பெரிதும் உதவியாக இருந்தார். கருணாநிதியின் கொள்கை குடும்பம் தொடர் வெற்றி பெறும்.
நிகழ்ச்சியி்ல், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முரசொலி செல்வம் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment