Published : 21 Oct 2024 08:40 PM
Last Updated : 21 Oct 2024 08:40 PM

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான் - சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை: மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், வீட்டில் இருந்து ஜூஸ் குடித்து விட்டு மருத்துவமனைக்கு வருதல், மருத்துவமனையில் பிரசவத்துக்கு முந்தைய கவனிப்பு மற்றும் பிரசவத்தின் போது நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்தாண்டு தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை துபாய் நாட்டில் பரிசோதனை செய்து, அது தொடர்பான வீடியோவை இர்பான் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ தொடர்பாக பதிலளிக்குமாறு இர்பானுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அந்த அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார்.

தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுவரை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடாத இர்பான், மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x