Published : 21 Oct 2024 07:00 PM
Last Updated : 21 Oct 2024 07:00 PM
சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகன் நாவரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். கடந்த 1996-ம் ஆண்டு இவரை சீனியர் மாணவரான ஜான் டேவிட் கொலை செய்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த போதும், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது தாயார் எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று (அக்.21) விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவையும் ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், திட்டமிட்டு ஜூனியரான மருத்துவ மாணவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படவேண்டும் என்பதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனுவை தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஜான் டேவிட்டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் அளிக்கிறோம்” என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT