Published : 21 Oct 2024 04:44 PM
Last Updated : 21 Oct 2024 04:44 PM

“பிரிவினைவாத அரசியலை சீமான், திருமாவளவன் கைவிட வேண்டும்” - தமிழக பாஜக

சென்னை: “இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன, மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன்தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல்.திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும். யார் தமிழன், யார் இந்தியன் என்கிற புரிதல் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மட்டும் சரியாக விளங்காதது தமிழகத்தின் சாபக்கேடாக உள்ளது” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் கவலைகளைப் போக்க, சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மறந்துவிட்டு, கூட்டணி ஆட்சியில் அதிகாரம், முதல்வர் கனவு என அவசர அரசியல் கருத்துக்களை அள்ளி தெளித்து தான் ஒரு முற்போக்கு அரசியல்வாதி இல்லை என்பதை திருமாவளவன் நிரூபித்துவிட்டார். தமிழக அரசியல் களத்தில் சுயநல அரசியல் விளம்பரத்துக்கும், தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்கும் முன்னுரிமை அளித்து செயல்படும் அரசியல் வியாபாரிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது அனைவருக்கும் உருவாகியுள்ளது

எந்த நோக்கத்துக்காக கட்சி ஆரம்பித்தோம் என்பதை மறந்து, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முக்கியத் தலைவர்களின் வழிகாட்டுதலில்தான் என் கட்சிப் பயணிக்கும் என் அரசியல் பாதை இருக்கும் என் இயக்கத்துக்காகவும், என் மக்களுக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து தமிழக மக்களின் உரிமைக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்றெல்லாம் கூக்குரல் இட்டு இன்று பாதையை மறந்த ஆடுகளாய், முதல்வர் கனவில் மிதந்து வருகிறார்கள்.

ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றார். சரண்டர் ஆனார். மீண்டும் நானே தமிழக முதல்வர் என்று கூறுகிறார். மற்றொருவர் இந்த உலகத்தில் நடக்காததை நடக்க முடியாததை மட்டுமே பேசி, மக்களை ஏமாற்றும் அரசியல் மேஜிக் வித்தையை ஒரு நடிகராக, இயக்குநராக சிறப்பாக திரைக்கதை அமைத்து, தான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி விட்டோம் என்ற மமதையில் தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லை என்று விதண்டாவாதமாக, பயங்கரவாதி போல் பேசுகிறார். யார் தமிழன், யார் இந்தியன் என்கிற புரிதல் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மட்டும் சரியாக விளங்காதது தமிழகத்தின் சாபக்கேடாக உள்ளது.

சாதி, மத, இன வேறுபாடு இன்றி, தமிழ் அன்னையின் மகனாக, தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, தாய்த்தமிழ் பயின்ற அனைவருமே தமிழன் தான். பாரத தாயின் தவப்புதல்வனாக இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன்தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல்.திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும்.

பல ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த காப்பாளன் போல நடித்துக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினைவான அரசியல் செய்து, உலகத்தின் மாவீரனாக போற்றப்படும் பிரபாகரனுடன் இலங்கை காடுகளில் துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே, விருந்து சாப்பிட்டேன் என்று கதை கதையாக, கண்டபடி பேசி, உலகெங்கும் கலெக்‌ஷன் செய்த சீமானுக்கு யார் தமிழன் என்பதை பகுத்துக் கூற உரிமையும் இல்லை. அருகதையும் இல்லை.

தமிழர்களின் வாழ்வு சிறக்க தமிழகம் செழிக்க, தமிழ் கூறும் நல்லுலகத்தின் எதிர்கால இளைய தலைமுறை மாணவர்களை இளைஞர்களை நல்வழிப்படுத்தி வள்ளுவன் வழியில் அரசியல் செய்பவனே தமிழன் என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம் சீமானின் தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும்; இந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. சீமான் போன்ற பிரிவினைவாதிகள்தான் தமிழர் என்ற போர்வையில் தமிழகத்தை ஆளக் கூடாது என்ற கருத்தில் எனக்கு தெளிவு உண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன்னும் பின்னும் சென்னை ராஜதானி முதல் இன்று வரை தாய்மொழியில் வேற்றுமை இருந்தாலும், தமிழ், தமிழர், தமிழ்நாடு மேல் அக்கறை கொண்ட தமிழர்கள் தான் ஆட்சி செய்தார்கள். இன்றும் தமிழர்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களை பிரிக்க முயலும் தமிழகத்தை அழிக்க முயலும் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.

கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொரு தலைவரும் முதல்வர் கனவு காண்பதில் தவறில்லை. கனவு கண்டவர் எல்லாம் முதல்வர் ஆனதும் இல்லை. இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால் டீக்கடையில் வேலை செய்தவர்களும், ஆட்டோ ஓட்டியவர்களும், பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களும் மத்திய, மாநில அமைச்சர்களாக, முதல்வராக பிரதமராகவும் மக்கள் கடமையை ஆற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் யாருமே முதல்வராக வேண்டும் என்று கனவு காணவில்லை. திட்டமிடவில்லை. தங்கள் பணியை செய்தார்கள்.

கடவுள் அருளால் மக்கள் கடமையை சிறப்பாக ஆற்றிய அனைவரையுமே, தமிழக, இந்திய மக்கள் எட்ட முடியாத உயரத்தில் வைத்து அழகு பார்த்தனர். பார்க்கின்றனர். அதேசமயம் சுயநல அரசியல், பிரிவினைவாத அரசியல் ஊழல் அரசியல், மதவாத அரசியல் செய்தவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சியை இழந்து சிறையிலும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே, மக்கள் விரோத திமுக ஆட்சியில் தற்பொழுது தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய சூழ்நிலையில், ஊழலாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் தமிழக மக்கள் கடும் மனவேதனையில் துன்பப்படும் நேரத்தில் தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்கும் விதத்தில், மக்களை இணைக்கும் வகையில் விழிப்புணர்வை உருவாக்கி, ஆக்கபூர்வமான நேர்மறை அரசியலை முன்னெடுத்து, சுயநல அரசியல், பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வான்புகழ் தந்த வள்ளுவனின் திருக்குறள் வழியில், அரசியல் நெறியில் ஒன்றிணைந்து மக்கள் பணியாற்றுவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x