Last Updated : 21 Oct, 2024 04:18 PM

 

Published : 21 Oct 2024 04:18 PM
Last Updated : 21 Oct 2024 04:18 PM

ஸ்பர்ஸ் திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 30.71 லட்சம் பேர் இணைப்பு: புதுச்சேரி ஆளுநர்

புதுச்சேரி: மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் 56 லட்சம் பேரில் 57 சதவீதம் பேர் முன்னாள் படைவீரர்களாகவும் அவர்களின் குடும்பத்தினராகவும் இருக்கின்றனர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான பட்ஜெட்டில் 65 சதவீத நிதியை இவர்களுக்காக ஒதுக்குகிறது. இவர்கள் குறைகளை தீர்வுகாணும் ஸ்பர்ஸ் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள 32 லட்சம் பேரில் 30.71 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.

‘ஸ்பர்ஸ் (SPARSH)' மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப் படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA,Chennai) அலுவலகத்தின் சார்பாக, ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் ஜிப்மர் ஆடிட்டோரிய வளாகத்தில் இன்று நடக்கிறது.

முகாமை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஓய்வூதியம் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகை பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகள் வழங்கி பேசியதாவது: “இந்தியாவின் ஆயுதப்படை வீரர்கள் நம் தேசத்தின் முதுகெலும்பு. அவர்கள் நம் தேச பற்றுக்கும், தேச பக்திக்கும் தன்னலமற்ற சேவைக்குமான குறியீடு. ஒவ்வொரு சிப்பாயும், மாலுமியும், விமான வீரரும் நம் நாட்டின் ஒருமைப்பாடை பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர்.

நாம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழவும், நாடு பாதுகாப்பாக இருப்பதும் அவர்கள் செய்து வரும் சேவைக்கு ஆதாரம். எல்லைகளில் அவர்கள் சவாலான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர். அவர்களின் தேச பக்தியே நம் தேசியக் கொடியை உயர பறக்க வைத்துள்ளது. சேவை முடிந்து அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நம் கடமை. அவர்களின் தியாகங்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதுபோன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் கண்ணியத்தோடு வாழ உறுதி செய்கிறோம்.

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான பட்ஜெட்டில் 65 சதவீத நிதி ஆயுதப்படை பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் கீழ் ஓய்வூதியம் பெறும் 56 லட்சம் பேரில் 57 சதவீதம் பேர் படைவீரர்களாக இருந்தோரும், அவர்களின் குடும்பத்தினராகவும் இருக்கின்றனர். தற்போதைய ஸ்பர்ஸ் திட்டத்தால் ராணுவத்தினர் தங்கள் வீடுகளில் இருந்தே ஓய்வூதிய சேவையை ஆன்லைன் மூலம் பெற முடியும். 32 லட்சம் பேரில் 30.71 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 40 முகாம்கள் தென்னிந்தியாவில் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் படைவீரர்களில் ஓய்வூதியம் பெறுவோரின் நீண்ட கால குறைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ராணுவத்தினர் சேவை எப்போதும் நினைவில் கொள்ளப்படும். உங்கள் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை தரப்படும். கடந்த 2021ல் பிரதமர் மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

பிரதமர் மோடியுடன் 8 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அவர் படைவீரர் சார்ந்த பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் தருவார். குஜராத்தில் தீபாவளி பத்து நாட்கள் கொண்டாடப்படும். அவர் தொடர்ந்து தீபாவளி பண்டிகையை படைவீரர்களுடன்தான் கொண்டாடி வருகிறார். இனிப்புகள் எடுத்துச் சென்று வழங்கி அவர்களுடன் உணவு சாப்பிட்டுத்தான் திரும்புவார்" என்று ஆளுநர் கூறினார்.

தமிழ்நாடு - புதுவை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயசீலன், இந்திய கப்பற்படையின் இணை அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ரூ.70 லட்சம் மதிப்பிலான காசோலைகள் ஆயுதப்படை வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x