Published : 21 Oct 2024 03:38 PM
Last Updated : 21 Oct 2024 03:38 PM
சென்னை: அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் வரும் அக்.26-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டாக இன்று (அக்.21) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1.25 லட்சம் ஊழியர்கள், ஓய்வுபெற்ற 95 ஆயிரம் ஊழியர்கள் என மொத்தம் 2.25 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள், 25 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது, நிலுவைத்தொகை, ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் தொழிற்சங்கங்கள் கூட்டாகவும், தனியாகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் பிரதான தொழிற்சங்கங்கள் போராட்டத்தை நடத்தும்போது கட்சி அரசியலை மையப்படுத்தி செயல்படுவதால் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு அரசை நிர்பந்திக்க இயலவில்லை. தொழிலாளர்கள் நலனைவிட கட்சி அரசியல் நலன் முன்னிலைப்படுத்தபடுகிறது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
எனவே, போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கவும் எல்பிஎஃப் (தொமுச), ஏடிபி (அண்ணா தொழிற்சங்க பேரவை), சிஐடியு, எஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எஃப் உட்பட அனைத்துக் கட்சிகளிலும் செயல்படும் பேரவை சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் தீர்வு காண முடியும். இது தொடர்பாக விவாதிக்க வரும் 26-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலையில் செயல்படும் சிஐடியு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து தொழிற்சங்களின் சார்பிலும் நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT