Published : 21 Oct 2024 02:26 PM
Last Updated : 21 Oct 2024 02:26 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், கோயில்கள் சார்பில் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவி அறப்பணிகளை மேற்கொள்ளுதல், சித்தர்களுக்கும், அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கும், மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் சீர்வரிசைகளை வழங்கி திருமணம் செய்து வைத்தல், மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்புற நடத்துதல் போன்ற பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கோயில்கள் சார்பில் 500 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திடும் வகையில் கடந்த 4.12.2022 அன்று தமிழக முதல்வர் 25 இணைகளுக்கு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் 600 இணைகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக தமிழக முதல்வர் 7.07.2023 அன்று 34 இணைகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022–2023 ஆம் நிதியாண்டில் 500 இணைகளுக்கும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் 600 இணைகளுக்கும், என மொத்தம் 1,100 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்றையதினம் (அக்.21) திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இன்று மட்டும் மொத்தம் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT