Published : 21 Oct 2024 12:37 PM
Last Updated : 21 Oct 2024 12:37 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் சிபிஐ-யின் கண்காணிப்பு வளையத்தில் முக்கியத் துறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. ஆனால் பலரும் அங்கு புகாரளிக்காமல் சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்களை தட்டிவிடுவதால் அது தொடர்பான சிபிஐ நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தனியார் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, சென்னை சிபிஐ தரப்பு புதுச்சேரியில் அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் முதுநிலை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் சீனிவாசராவ் (59), புரோக்கர் ரமேஷ் கண்ணன் (52) இருவரையும் அப்போது கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல் புதுச்சேரியில் மேலும் சில துறைகளிலும் அதிகளவில் லஞ்ச முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சிபிஐக்கு புகார்கள் சென்றுள்ளன.
மின்துறை, போக்குவரத்து, நகரமைப்புக் குழுமம், நுகர்பொருள் வணிகம், தாலுக்கா அலுவலகங்கள், பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அலுவலகங்களில் நடக்கும் முறைகேட்டுப் புகார்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்கிறது. வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுச்சேரியிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையைத் தவிர்த்து சிபிஐக்கு பொதுமக்கள் புகார்களை அனுப்புவது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச முறைகேடுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 15-க்குள் தான் உள்ளன. அந்தளவுக்கு புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை சம்பிரதாயத்திற்குச் செயல்பட்டு வருகிறது.
போலிச் சான்றிதழ் அளித்துப் பணியில் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை விசாரணை முழுமை அடையவில்லை. மொத்தத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை.
இதனால் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிட்ட மக்கள், அவர்களிடம் புகார் தர விருப்பம் இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தையும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தையும் நாடுகின்றனர். ஆகவே, புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை மீது அதற்கு தலைமை வகிக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநர் சிறப்புக் கவனம் செலுத்தி இந்த நிலையை மாற்ற வேண்டும்.” என்றனர்.
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் ஆதாரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் அனுப்பி வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் சிபிஐ தரப்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரியில் தொடர் ரெய்டுகளை நடத்த சிபிஐ தயாராவதாகவும் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT