Last Updated : 21 Oct, 2024 10:50 AM

 

Published : 21 Oct 2024 10:50 AM
Last Updated : 21 Oct 2024 10:50 AM

கோவை: ஒரு மாத ஊதியத்தை போனஸாகக் கேட்டு மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்

ஒரு மாத ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள். படம் :ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைக் பணிகளை கவனிக்கும் ஒப்பந்தந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கிடக் கோரி இன்று (அக்.21) பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியார்கள் பணியாற்றுகின்றனர். இதில் 5,500 பேர் ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். தவிர, ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 460 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நடப்பாண்டு தீபாவளி போனஸ் தொகையாக, 8.33 சதவீதம் வழங்க தொழிற்சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதாவது ஒரு மாத ஊதியம் ரூ.16,500 வழங்க வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்கள் தரப்பில் ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை போனஸ் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் இதை ஏற்கவில்லை. இதற்கிடையே தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த போனஸ் தொகை வங்கி மூலம் செலுத்தப்பட்டது.
இதையடுத்து ஒரு மாத ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்.21) பணியை புறக்கணித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம், கோவை மாவட்ட லேபர் யூனியன், சமூகநீதிக் கட்சி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணியாளர் தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் . போராட்டத்தில் பங்கெடுத்திருப்பவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x