Published : 21 Oct 2024 10:27 AM
Last Updated : 21 Oct 2024 10:27 AM
புதுச்சேரி: வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின் போது இறந்த போலீஸாருக்கு முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த போலீஸார் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி, கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். நிறைவாக, பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், தலைமைச் செயலர் சரத் சவுகான், போலீஸ் டிஜிபி-யான ஷாலினி சிங்., அரசுச் செயலர் கேசவன், ஐஜி-யான டாக்டர் அஜித்குமார் சிங்லா, டிஐஜி-யான பிரிஜேந்திர குமார் யாதவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT