Published : 21 Oct 2024 06:35 AM
Last Updated : 21 Oct 2024 06:35 AM
சென்னை: பாஜகவினர் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க திமுக - இண்டியா கூட்டணியினர் முயற்சிக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவை நேற்று கொண்டாடினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக மக்கள் இன்று ஆன்மிகத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு கொடுக்கிற ஆதரவு அதை வெளிக்காட்டுகிறது. ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. திமுக - இண்டியா கூட்டணியினரின் நோக்கம், ஆளுநர் பங்கேற்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்பது தான். அதை அவர்கள் செய்து விட்டார்கள்.
ஆளுநர் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் உண்மையை பேசும்போது, திமுகவினருக்கு கசப்பை ஏற்படுத்துகிறது. அந்த கசப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி, தமிழை வளர்த்து, தமிழின் பெருமையை உலகெங்கும் எடுத்து செல்கிறார்.
திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பாஜக தேசிய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். பாஜக ஆட்சி அமைந்து 100 நாட்களில் 4 இடங்களில் கலாச்சார மையத்தை அமைத்திருக்கிறோம்.
பாஜகவினர் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க திமுக-இண்டியா கூட்டணி கட்சி முயற்சிக்கிறது. அது நடக்காது. அகமதாபாத்தில் சபர்மதி நதி, நர்மதா நதியை எப்படி சீரமைத்திருக்கிறார்கள் என்பதை மோடியிடம் இருந்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்காமல், வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது. அந்த அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை. கூவத்துக்குள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இந்த அரசே கட்டுகிறது. கூவம், அடையாறு ஆற்றின் உண்மையான தன்மையை கண்டுப்பிடிக்க ஆட்சியாளர்களால் முடியவில்லை.
சமூக நீதியை பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதி கிடையாது. கடைகோடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் நோக்கம். ஆனால், திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிற திருமாவளவன் எப்படி பட்டியலின சமுதாயத்தின் தலைவராக இருக்க முடியும். திருமாவளவனின் உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருமாவளவன் முதல்வராவதெல்லாம் எந்த காலத்திலும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT