Published : 21 Oct 2024 10:17 AM
Last Updated : 21 Oct 2024 10:17 AM
ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் ரூ.60 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள், அங்கு சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆனதை நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தருணத்தில், இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு, இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார்ந்த முன்னேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழர்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.75 கோடி நிதி உதவி வழங்கியது.
அப்போது, இலங்கையின் மலையக கட்சித் தலைவர்களான செந்தில் தொண்டமான், மனோ கணேசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் மத்திய அரசுஉதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்தியா ரூ. 60 கோடி நிதி வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்த புரிந்துணர்வுக் கடிதத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சகச் செயலர் திலகா ஜெயசுந்தர ஆகியோர் நேற்று முன்தினம் கையொப்பமிட்டனர்.
பள்ளிகள் புனரமைப்பு... இந்த நிதியைக் கொண்டு மலையகத்தில் உள்ள ஊவா, சப்ரமுகமாவட்டங்களைச் சார்ந்த 9 கல்விநிறுவனங்கள் மேம்படுத்தப்படும். மேலும், இந்தியா சார்பாக இலங்கையின் கல்வி நிறுவனங்களுக்கு 110 பேருந்துகள், வட மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 மின் நூலகங்கள், 9 மாகாணங்களில் ஆங்கில மொழிஆய்வகங்கள், உருகுனை பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம், 200பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT