Published : 21 Oct 2024 06:15 AM
Last Updated : 21 Oct 2024 06:15 AM
திருவள்ளூர்: வேப்பம்பட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மக்களிடம் விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பணி கடந்த15 நாட்களுக்கும் மேல் நடைபெறாததால், சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் இங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இதற்காக, சாலையோரத்தில் பள்ளம்தோண்டப்பட்டுள்ளது. இதனால், சாலையில் உள்ள கடைகளுக்கு மக்கள் சென்று பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மருந்துக் கடைகளுக்குக்கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், சிலரது வீடுகளும் இந்த சாலையில் உள்ளதால், அவர்களுக்கு தங்களது வீடுகளுக்கு செல்ல பள்ளத்தை தாண்டி செல்லவேண்டி உள்ளது. இதனால் பள்ளத்தில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்துடனேயே செல்கின்றனர். இரவு நேரத்தில் இந்தப் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ராஜ்கமலிடம் கேட்டபோது, "மழைநீர் வடிகால் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இடையில் மழை வந்ததால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. தற்போது பள்ளத்தில் இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி நிறைவடைந்ததும், கால்வாய் விரைவில் கட்டி முடிக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT