Published : 21 Oct 2024 07:08 AM
Last Updated : 21 Oct 2024 07:08 AM
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகள போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் ஆகியவை அக்டோபர் 28-ம் தேதி முதல் 2025 பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.
இதில் சதுரங்கம், ஜூடோ, கடற்கரை கையுந்து பந்து, சாலையோர மிதிவண்டி, நீச்சல், ஸ்குவாஷ், கேரம், ஜிம்னாஸ்டிக், வாள்சண்டை, குத்துச்சண்டை, வளையப்பந்து, சிலம்பம், டேக்வாண்டோ, தடகளம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில்… இதில் 11 - 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தங்கும் இடம், உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை பாதுகாப்பான முறையில் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய போட்டிகளுக்கான தரத்தில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் குழு அமைத்து, முறையாக விதிமுறைகளை பின்பற்றி, எவ்வித புகாருக்கும் இடம் தராதவாறு போட்டிகள் நடைபெற வேண்டும். போட்டிகளை சிறப்பாக நடத்த, உரிய குழுக்களை அமைத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT