Published : 21 Oct 2024 05:48 AM
Last Updated : 21 Oct 2024 05:48 AM
சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதம் இருப்பது வழக்கம். இதனால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுவார்கள்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேட்டில் மீன்களை வாங்க நேற்று அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. மீன் வரத்தும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, சங்கரா, சுறா, வஞ்சிரம், வவ்வால், பாறை, மத்தி உள்ளிட்ட மீன்களை மீனவர்கள் அதிகளவில் பிடித்து வந்தனர்.
வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 950-க்கும், பெரிய சங்கரா மீன் ரூ.380-க்கும், சின்ன சங்கரா ரூ.220-க்கும், வவ்வால் கிலோ ரூ.850-க்கும், நெத்திலி கிலோ ரூ.400-க்கும், இறால் கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், நண்டு கிலோ ரூ.550-க்கும் விற்கப்பட்டன. சூறை ரூ.110-க்கும், கானாங்கெளுத்தி ரூ.250-க்கும், மத்தி ரூ.150-க்கும், கிளிச்சை ரூ.120-க்கும், கொருக்கை மீன் ரூ.750-க்கும், வாளை மீன் ரூ.350-க்கும், கடம்பா ரூ.300-க்கும் விற்பனைஆயின.
இதுகுறித்து, மீனவர்கள் கூறும்போது, “புரட்டாசி மாதம் என்பதால், கடந்த ஒருமாதம் மீன் விற்பனை சற்று மந்தமாக இருந்தது. தற்போது புரட்டாசி முடிந்து விட்டதால் மீண்டும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும்” என்றனர். மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் கூறும்போது, “மீன்களின் வரத்து அதிகளவில் இருந்தபோதும், மீன்களின் விலை குறையவில்லை. குறிப்பாக, பெரிய மீன்களின் விலை அதிகமாக உள்ளது’ என்றனர்.
இதேபோல், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனைக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த கூட்டம். படம்: எஸ்.சத்தியசீலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment