Published : 20 Oct 2024 09:22 PM
Last Updated : 20 Oct 2024 09:22 PM
மதுரை: ‘தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை திமுகவினர் இப்போதே தொடங்க வேண்டும். தமிழக முதல்வரின் திட்டங்களை திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
மதுரை திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலர் மு.மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பேசியதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றியதால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றோம். இந்த வெற்றியை நாம் மனதில் வைத்து அடுத்த தேர்தலில் சும்மா இருந்து விடக்கூடாது.
சரியான பூத் கமிட்டி ஆட்களை நியமித்து 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என நினைத்து மக்களுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.
எனவே நாம் மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்ற வேண்டும். தமிழக முதல்வர் மக்களுக்கான திட்டங்களை நேரடியாக வழங்கி வருகிறார். கட்சி, சமுதாய பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார்.
அவரது வழியில் தற்போது துணை முதல்வர் தமிழகமெங்கும் மாவட்டங்கள் தோறும் சென்று கிராமங்கள் தோறும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களை செய்து வருகிறார். தமிழக முதல்வரின் திட்டங்களை வீடு தோறும் சென்று கூறி தேர்தல் பணிகளை தொடங்குங்கள். திண்ணை பிரச்சாரம் செய்து தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக மாவட்ட செயலர் மு.மணிமாறன் பேசுகையில், மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும். தலைமை பார்த்து யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர்களின் வெற்றிக்கு நாம் தற்போது இருந்து பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT