Published : 20 Oct 2024 07:14 PM
Last Updated : 20 Oct 2024 07:14 PM

“தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது”: அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்.23-ம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்.28-ம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது: கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.

ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன்முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதி ஒதுக்கி வருகிறோம்.

ஆட்சிக்கு வந்தபோது, ரூ.32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x