Published : 20 Oct 2024 06:46 PM
Last Updated : 20 Oct 2024 06:46 PM

ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

முத்தரசன்

கும்பகோணம்: "ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக அவர் செயல்படுவது நாட்டிற்கு நல்லது அல்ல" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கும்பகோணம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழக ஆளுநர் ரவி, தான் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து, பொறுப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படவேண்டும். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஏற்பட்ட குளறுபடி குறித்து அரசியல்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் குழந்தைகள் தவறுதலாக பாடிவிட்டதாகக் கூறுகின்றனர்.

ஓர் அரசு நிகழ்ச்சியில் பாடும் பாடல்களைப் பலமுறை ஒத்திகை பார்த்துத் தான் பாடுவார்கள். ஆகையால் இந்த சம்பவத்தை வேண்டும் என்றே திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தூர்தர்ஷன் ஏற்பாட்டாளர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தி, சமஸ்கிருதம் படித்தால் தான் இந்தியாவில் இணைந்திருக்க முடியும் என்ற அச்சத்தில் கூறியுள்ளது ஏற்புடையதல்ல.

அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, விழுப்புரம் வீரமுத்து ஆகியோர் இந்தி, சமஸ்கிருதம் படிக்கவில்லை. அரசு பள்ளியில் தான் படித்தார்கள், மேல் படிப்பு ஆங்கிலம் படித்துள்ளனர். தமிழ் மொழியில் படித்து நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்தான் அப்துல் கலாம். ஆகையால் ஆளுநர் தமிழைப் போற்றுவதுபோல் போற்றிவிட்டு, மற்றொரு வகையில் தூற்றும் செயலில் ஈடுபடக் கூடாது.

பிரதமர் மோடி கூட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் மொழியைப் போற்றி பேசுகிறார் எனக்கூறும் ஆளுநர், அனைத்து மொழிக்கும் ஒதுக்கும் நிதியை சமமாக ஒதுக்கவேண்டும். சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு மிக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நான் சமஸ்கிருத மொழியை மறுக்கவில்லை. அதுவும் செம்மொழி தான். அந்த மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அந்த மொழிக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்கம், பஞ்சாபி ஆகிய மொழிகளுக்கு மிகக்குறைந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இது ஜனநாயகம் அல்ல. நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. ஆளுநரின் பதவிக்காலத்தை குடியரசுத் தலைவர் நீட்டிக்கவில்லை; ரத்தும் செய்யவில்லை.

ஒரு திரிசங்கு நிலையில் தான் ஆளுநர் உள்ளார். ஆகையால் அவர் மாற்றப்பட வேண்டும். அவர் வகிக்கும் பொறுப்புக்கு எதிரான முறையில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவது நாட்டிற்கும் நல்லது அல்ல, அவருக்கும் நல்லது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x