Published : 20 Oct 2024 06:31 PM
Last Updated : 20 Oct 2024 06:31 PM

‘‘கூட்டணி சரியில்லை’’: தொண்டர்கள் மத்தியில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

கரூர்: கூட்டணி சரியில்லை என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் செல்லாண்டிப்பட்டி தனியார் மஹாலில் இன்று (அக். 20ம் தேதி) நடைபெற்றது.

அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை வழங்கி பேசியபோது, ''கிருஷ்ணராயபுரம் தொகுதி 1989ம் ஆண்டு சேவல் சின்னம் வென்ற 27 தொகுதிகளில் ஒன்றாகும். கேட்காமலே கொடுத்த தலைவர் எம்ஜிஆர். சத்துணவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கினார். 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை போட்டியிட வைத்தார். 1989, 91ம் ஆண்டுகளில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1991ம் ஆண்டு திமுக இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாற்றங்கள் உருவாகும்.

நாம் அதற்கான பணிகளை சிறந்த முறையில் அமைத்திட வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி மலரும். அதற்கான காலமாற்றம் உருவாகிறது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். எத்தனையோ திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மலரவேண்டும் என ஒருங்கிணைந்து செயல்படுவோம்'' என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ''கரூரில் அதிமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று அக். 28ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்து வருகின்றனர். கட்சியினரை ஜாமீனில் வெளியே எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தாந்தோணி ஒன்றியத்தில் 16,800 உறுப்பினர் படிவங்கள் உள்ளன. தாந்தோணி ஒன்றியத்தில் 12 ஆண்டுகள் செயலாளராக இருந்துள்ளேன். 303 கிளைகள் இருந்தன. தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்பது உறுப்பினர் அட்டைகள் வழங்குவதிலே தொடங்கிவிட்டது.

கூட்டணி சரியில்லை. தலைவர்கள் விரைவில் நல்ல கூட்டணியை அமைப்பார்கள். திமுக கூட்டணி விரைவில் உடையும். 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும்'' எனக் குறிப்பிட்டார்.

மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிக, ஊராட்சிக்குழு முன்னாள் துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர்கள் (தாந்தோணி கிழக்கு) விசிகே பாலகிருஷ்ணன், (தாந்தோணி மேற்கு) என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x