Published : 20 Oct 2024 06:17 PM
Last Updated : 20 Oct 2024 06:17 PM

சுவாமிமலை சுவாமிநாதர் கோயில் | பக்தர்கள் தூங்கிக்கொண்டிருந்த தரையில் தண்ணீரை ஊற்றி விரட்டியடிப்பு

கோயில்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 19-ம் தேதி நள்ளிரவு பக்தர்கள் தூங்கிக்கொண்டிருந்த தரையில் தண்ணீரை ஊற்றி கோயில் நிர்வாகம் விரட்டியடித்ததால் பக்தர்கள் வேதனையுடன் தெருக்களில் தூங்கினர்.

ஆறுபடை வீடுகளுள் 4-ம் படை வீடாக, தகப்பன் சுவாமிக்கு உபதேசம் செய்த தலமாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மாநில, மாவட்ட பக்தர்கள், வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதனால் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், 19-ம் தேதி கார்த்திகையையொட்டி, நள்ளிரவு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர், கோயிலின் தெற்கு முகப்பு முன்புறம் மண்டபத்தில் தூங்கினர். அப்போது தரையில் திடிரென தண்ணீர் வந்ததால், தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் எழுந்தனர். இதனையடுத்து, பக்தர்கள் வேறு வழியில்லாமல் தெருக்கள் மற்றும் திண்ணைகளில் படுத்துறங்கி, காலையில் வீடுகளுக்குச் சென்றனர்.

இது தொடர்பாகப் பக்தர்கள், "கார்த்திகை நட்சத்திரத்தன்று இரவு கோயில் உள்பிரகாரத்தில் படுத்துறங்கி விட்டு, காலையில் எழுந்து செல்வோம். பின்னர் கரோனாவுக்கு பிறகு கோயிலுக்குள் தூங்குவதற்கு அனுமதி இல்லை என நிர்வாகம் உத்தரவிட்டதால், சிலர் மட்டும் தெற்கு வாசலின் முகப்பு மண்டபத்தில் படுத்துறங்கி வந்தோம்.

இந்த நிலையில் 19-ம் தேதி கோயில் ஊழியர்கள் 2 பேர், நாங்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் படுத்திருந்த தரையில் திடீரென, பிரதான கதவின் உள்புறத்தில் இருந்து தண்ணீரைப் பாய்ச்சினர். இதனை அறிந்த பக்தர்கள், அவர்களை தட்டி கேட்ட போது, எங்களை விரட்டியடிக்காத குறையாக, இங்கு தூங்கக் கூடாது, வெளியில் செல்லுங்கள் என ஒருமையில் பேசினர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆனால் அவர்கள், எங்களை விரட்டும் விதமாக, அந்த இடத்தில் நிற்க விடாமல் தண்ணீரைப் பாய்ச்சியதால், நனைந்த உடைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு வேறு வழியில்லாமல், தெருக்கள், கடையோரங்கள் மற்றும் திண்ணைகளில் படுத்துறங்கி, காலையில் வேதனையுடன் வீடுகளுக்குச் சென்றோம். பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாகக் கோயிலில் படுத்துறங்க வருவது, காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்கமாகும். இதனை சுவாமிமலை கோயில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது வேதனையான செயலாகும்" எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் கோயில் துணை ஆணையர் உமாதேவி, "கோயிலில் 70 வயதிற்கு மேற்பட்டோர் 19-ம் தேதி நள்ளிரவு திடீரென தங்கினர். அவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் நாங்கள் தான் பதில் கூறவேண்டும். அதனால் அவர்களை எழுந்து செல்ல அறிவுறுத்தினோம். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கவில்லை. அந்த மண்டபத்தின் முன்புறம் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது. அதனால் அவர்கள் படுத்திருந்த தரையில் தண்ணீர் வந்தது. பின்னர், நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் அங்கிருந்து சென்றனர்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x