Last Updated : 20 Oct, 2024 06:01 PM

 

Published : 20 Oct 2024 06:01 PM
Last Updated : 20 Oct 2024 06:01 PM

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட உள்ள ரேஷன் கடைகள்

கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளாக மூடியுள்ள ரேஷன் கடைகள் நாளை திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, அரிசி விநியோகம் தொடங்குகிறது.

புதுச்சேரியில் ரேஷன்கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக 2016ல் புகார் எழுந்தது. அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய தடை விதித்தார். இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசின் உத்தரவுப்படி நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கியில் செலுத்தும் நடைமுறையை கொண்டுவந்தார். இதன்படி கடந்த 2019ல் ரேஷன் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.

இதன்படி ஒரு கிலோ அரிசி ரூ.30 என மஞ்சள் கார்டுக்கு 10 கிலோவுக்கு ரூ.300, சிகப்பு கார்டுக்கு 20 கிலோவுக்கு ரூ.600 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் அரிசி விலை உயர்வு உட்பட பல காரணங்களால் மீண்டும் ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால், விரைவில் ரேஷன்கடைகளில் அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

எப்போது கடைகள் திறக்கப்படும் என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வரும் தீபாவளிக்கு முன்பாக ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு தீபாவளிக்காக இலவச அரிசி, சர்க்கரை ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். இந்நிலையில் குடிமைப்பொருள்வழங்கல் துறை மூலம் நாளை ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறது.

அத்துடன் தீபாவளிக்கான இலவச பத்து கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடை மூலம் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை சாலையில் உள்ள கடையில் நடக்கிறது. இந்நிகழ்வில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதன்படி புதுவையில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சத்தியமூர்த்தி, ரேஷன்கடை ஊழியர் சங்கங்கள், ரேஷன்கடை உரிமையாளர்களுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளார். அதில், "புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் (அரசு ஊழியர்கள், கவுரவ கார்டுதாரர்கள் நீங்கலாக) 10கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை நேரடியாக ரேஷன்கடைகள் மூலம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கான்பெட் மூலம் அரிசி, சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை சிரமமின்றி வழங்க ஏதுவாக ரேஷன்கடைகளை தயார்நிலையில் வைத்திருக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x