Last Updated : 20 Oct, 2024 04:30 PM

 

Published : 20 Oct 2024 04:30 PM
Last Updated : 20 Oct 2024 04:30 PM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் தயாராக உள்ளார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக முதல்வர் தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மதுரை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் நான்குவழிச்சாலையை அடையும் வகையில் ரூ.154.98 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், "அருப்புக்கோட்டை நகருக்குள் சாலைகள் அனைத்தும் குறுகியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் போக்குவரத்து நெரிசலால் தவிக்கிறார்கள். இதைத் தடுக்கவும், அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ரூ.154.98 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நில எடுப்புக்காக மட்டும் ரூ.35.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இச்சாலையில், 22 பெட்டிப் பாலங்கள், 10 சிறுபாலங்கள், 3 சாலை சந்திப்புகள், மானாமதுரை - விருதுநகர் ரயில்வே வழித்தடத்தின் குறுக்கில் ஒரு ரயில்வே மேம்பாலம் ஆகியவை உள்ளன. தற்போது இப்புறவழிச் சாலையில் மொத்தம் உள்ள 22 பெட்டிப் பாலங்களும், 9 சிறுபாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 சிறு பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 9.9 கி.மீட்டர் தூரத்தில் 7.50 கி.மீ சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். அதன்பின் அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும்.

வடகிழக்கு பருவமழையையொட்டி அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார். அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமைச்சர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளார்கள். எல்லோரும் களப்பணியில் இருக்கிறோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் தயாராக உள்ளார்" என்று கூறினார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் வி.ப.ஜெயசீலன், நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் திருநெல்வேலி கோட்டப்பொறியாளர் லிங்குசாமி, உதவி கோட்ட பொறியாளர் உமாதேவி, வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x