Published : 20 Oct 2024 03:08 PM
Last Updated : 20 Oct 2024 03:08 PM

தமிழகத்தில் மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவை: அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம் விளையாட்டில் ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் நிலையில், 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி கல்லூரியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டி தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகம் சார்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றியும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடி போட்டியினை துவக்கி வைத்தார்.

தேசிய அளவிலான இப் போட்டியில் டெல்லி, ஹரியானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை சந்தித்தது வாழ்த்து தெரிவித்த அன்புமணி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குப்படுத்துவதற்காக இன்னும் அதிகமான முயற்சிகள் வேண்டும். பொதுவாக மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானங்கள் குறைவாக உள்ளன. மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானங்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளதால், மாணவர்கள் விளையாட்டில் மேம்படுவதற்கு தாமதமாகும். இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம் விளையாட்டில் ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் நிலையில், 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சில அரசு பள்ளிகளை மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதிலும் சில இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இது போன்ற போக்கை இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் விளையாடுவதற்கு மைதானமே இல்லை. இத்தகைய நிலையில் மாணவர்கள் விளையாட்டில் மேம்பட மிகவும் கடினப்படுவார்கள் என்பதை வேதனைக்குரிய செயலாகும்.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் மீது மிகுந்த கவனத்தை செலுத்தி இந்த அரசு விளையாட்டில் முன்னேற்றம் அடைய போதிய நிதி ஆதாரங்களையும் விளையாட்டு மைதானங்களையும் அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகம் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x