Published : 20 Oct 2024 11:25 AM
Last Updated : 20 Oct 2024 11:25 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா வளைவு சாலையில் ரூ.15 கோடியில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.12-ம் தேதி திறந்துவைத்தார். இதில் 360 கடைகளும், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் 84 இருசக்கர வாகனங்கள், 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மீன் அங்காடியின் வெளியே மெரினா வளைவு சாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன மீன் அங்காடி திறக்கப்பட்ட நிலையில், மெரினா வளைவு சாலையை, சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா வளைவு சாலையில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்.19 முதல் நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன்களை விற்க வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று, சில மீன் வியாபாரிகள் மெரினா வளைவு சாலையில் மீன் கடைகளை திறந்திருந்தனர். மாநகராட்சி தடையை மீறி திறந்ததால், அவற்றை போலீஸ்பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அதற்கு பெண்மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்காடிக்குள் கடை வைத்தால்,வாடிக்கையாளர்கள் குறைவா கவே வருவார்கள். சாலையோரம் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், வியாபாரிகள் கடை வைக்க பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் மரப்பலகைகளை போலீஸார் அப்புறப்படுத்தி, அங்காடிக்குள் கடைகளை திறக்க அறிவுறுத்தினர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் அங்காடிக்குள் கடைகளைத் திறந்தனர்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணைஆணையர் பிரவீன் குமார் நேரில் சென்று, மீன் அங்காடியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டதா என ஆய்வு செய்தார். அப்போது, அங்காடியில் மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT