Published : 20 Oct 2024 11:25 AM
Last Updated : 20 Oct 2024 11:25 AM
சென்னை: சென்னையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தொடங்கிவைத்த இதில் ஆண்கள் ‘பிங்க்’ நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றனர்.
ஆரம்ப நிலையிலேயே மார்பகப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதில் ஆண்களுக்கான பங்கை வலியுறுத்தும் வகையில் அப்போலோ புற்றுநோய் மையம் சார்பில் ‘மென் இன் பிங்’ என்ற விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட ஏராளமான ஆண்கள் ‘பிங்க்’ நிற டீசர்ட் அணிந்தவாறு பங்கேற்றனர்.
தொடர்ந்து பெண்களின் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் ஆண்களின் பங்களிப்பு, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எந்த அளவுக்கு சிறப்பான விளைவுகள் கிடைக்கும் என்பவை குறித்து விழிப்புணர்வு வாசக பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கனிமொழி பேசும்போது, “மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஆண்களும், இளைஞர்களும் ஒருங்கிணைந்து பங்கேற்று பெண்களை ஊக்குவிப்பதை காண்பது மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து, சிகிச்சையை தொடங்குவது என்பது மிகவும் முக்கியமானது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது சிறப்பான விளைவுகளை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் செயல்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தங்களது வாழ்க்கையில் உள்ளபெண்களை ஊக்கப்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ மனையின் புற்றுநோயியல் துறை இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி, புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் மதுபிரியா, மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷாரெட்டி, மார்பக கதிர்வீச்சியல் துறை நிபுணர் முக்தா மஹாஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT