Published : 20 Oct 2024 10:57 AM
Last Updated : 20 Oct 2024 10:57 AM

மொழியை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது: எல்.முருகன் விமர்சனம்

சென்னை: மொழியை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது என மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான். மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில்கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக இருக்கிறார் பிரதமர் மோடி.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில்இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக - இண்டியா கூட்டணி இவ்வாறு செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல்இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x