Published : 11 Jun 2018 05:13 PM
Last Updated : 11 Jun 2018 05:13 PM
எழுத்தாளரும், 'சீவலப்பேரி பாண்டி' படத்தின் கதாசிரியருமான சௌபா உடல் நலக்குறைவால் மதுரையில் மரணம் அடைந்தார்.
மதுரை கோச்சடை அருகிலுள்ள டோக்நகரைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (எ) சௌபா (55). பிரபல எழுத்தாளரான இவர் நெல்லை மாவட்டம், சீவலப்பேரி என்ற ஊரை பற்றிய ஒரு சம்பவத்தை தொடராக எழுதியவர். உசிலம்பட்டி சிசுக் கொலை, கொடைக்கானல் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்தார். தனியார் தொலைக்காட்சி செய்தியின் 5 நிமிட சிறப்புப் பகுதியை தயாரித்து வந்தார். இவரது மனைவி லதா பூரணம் (50). விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (27).
குடும்பப் பிரச்சினை காரணமாக 18 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கல்லூரி படிப்பு முடித்த விபின் தந்தை, தாயாரிடமும் மாறி, மாறி வசித்தார். நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக இருந்தார். இதை சௌபா கண்டித்தார். இதில் தந்தை, மகனுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மார்ச் மாதம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரை விபின் குறைந்த விலைக்கு விற்றது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை அதிகரித்தது.
இந்நிலையில், விபின் வீட்டில் கொலை செய்யப்பட்டு, உடல் கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்திலுள்ள சௌபாவின் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சௌபா, அவரது தோட்டத் தொழிலாளிகள் பூமி (40), கனிக் குமார்(42) கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீஸார் அழைத்து வந்தபோது, ‘செய்தியாளனே செய்தியாகிவிட்டேன்’ என மனம் உடைந்து பேசினார். மார்ச் 11-ம் தேதி மதுரை மத்திய சிறையில் சௌபா அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் மார்ச் 22-ல் சேர்க்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்து, இதயம் உட்பட பாதிப்புகள் கூடியது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரையில் அளவு குறையாத சூழலில் கடந்த 10 நாட்களுக்கு முன், அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பின், அவரது உடல் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், அவரது இறப்பு குறித்து கரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT