Published : 20 Oct 2024 04:54 AM
Last Updated : 20 Oct 2024 04:54 AM
சென்னை: தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி (வெள்ளி) அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால், சொந்த ஊருக்கு சென்று வருவது சிரமம் என பல தரப்பினரும் கூறி வந்தனர். இதன் காரணமாக, தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, அரசு தற்போது விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் 1-ம் தேதி (வெள்ளி) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வியாழன் (தீபாவளி), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT