Published : 19 Oct 2024 06:47 PM
Last Updated : 19 Oct 2024 06:47 PM
சென்னை: சென்னையில் கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் பெய்த மழையின் போது, அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 16-ம் தேதி சென்னயில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு மண்டலங்களில் அதி கனமழை பெய்தது. பல இடங்களில் 20 செமீ அளவுக்கு மேல் மழை பதிவானது. இதனால் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதில் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீர் அன்று இரவே வடிந்துவிட்டது. ஆனால் வேளச்சேரி, பள்ளிக்காரணை, வள்ளூவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா சாலை, அரும்பாக்கம், பெரம்பூர், பட்டாளம், புளியந்தோப்பு, வட பெரும்பாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட சில இடங்களில் 17-ம் தேதி அன்றும், வெள்ளநீர் தேங்கியது. அதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்கள் வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர் வாருதல், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மீண்டும் தூர் வாருதல் மற்றும் அடைப்புகளை நீக்குதல், கூடுதலாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை ஆகியவற்றை பராமரிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் தூர் வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மழைநீர் வடிகால்துறை மற்றும் இயந்திர பொறியியல் துறை அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தூர் வார தேவையான இயந்திரங்களை மேற்கூறிய கால்வாய்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. மேலும் கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் புதிதாக நிலத்தடி நீரை செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT