Last Updated : 19 Oct, 2024 03:37 PM

 

Published : 19 Oct 2024 03:37 PM
Last Updated : 19 Oct 2024 03:37 PM

தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறும் ஒன்றாகிவிட்டது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த, இந்திய கடற்படை கப்பல், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து, படகுகளை பறிமுதல் செய்து, கைது செய்வதை தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை இன்று (அக்.19) விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கவுரி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

முன்னதாக விசாரணையின் போது, மனுவில், பிரதமரின் முதன்மை செயலரை வழக்கில் தேவையின்றி சேர்த்துள்ளதாகவும், அவரை வழக்கிலிருந்து நீக்குமாறும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினால் மீனவர் பிரச்சினை சரியாகும் என மனுதாரர் நினைக்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை. பிரதமரின் முதன்மைச் செயலர் வழக்கில் சேர்க்கப்பட்டதில் என்ன தவறு? வேண்டுமானால் ஏன் பிரதமரின் முதன்மை செயலரை இந்த வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்பது தொடர்பான காரணத்துடன் மனுத்தாக்கல் செய்யுங்கள்” என மத்திய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x