Published : 19 Oct 2024 03:08 PM
Last Updated : 19 Oct 2024 03:08 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள திடலின் அருகில் இருந்த ஒரு வயதுடைய 8 பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனங்கன்றுகளை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஒவ்வென்றிலும் 16 விளக்குகள் வீதம் 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 60 அடி அகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலின் இருபுறமும் தொண்டர்கள் வசதிக்காக 300 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலின் உள்ளே செல்லும் மின்வாரிய கம்பிகளை அகற்றி கேபிளாக பூமிக்கடியில் புதைக்க மின்வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் மாநாடு நடைபெறும் தினத்தில் திடலுக்குள் செல்லும் மின் கம்பிகள் வழியாக மின்சாரம் செல்வதை தடை செய்ய உள்ளனர்.
திடலில் உள்ள கிணறுகளை, இரும்பு கர்டர்கள் மீது மரப்பலகைகள் அமைத்து மூடப்படுகிறது. தொண்டர்களுக்கு மாநாட்டு திடலில் உணவு வழங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனால் கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டு திடலின் அருகில் இருந்த ஒரு வயதுடைய 8 பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனங்கன்றுகளை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT