Published : 19 Oct 2024 12:19 PM
Last Updated : 19 Oct 2024 12:19 PM

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.” என்று சென்னையில் நடந்துவரும் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாடு இன்று (அக்.19) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும். ஏன், தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக்கூடியவர்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியைப் பரப்புவீர்களா, என்று யூடியூபர் ஒரு வழக்கில், சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியிருந்ததை, இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆகவே, சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளைப் பற்றியும், நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் பகிரந்துகொள்ள வேண்டும், என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாநாட்டை முன்நின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறையாது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக் கும்பல்கள், மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைகளில், மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது.

அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப் பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதைதடுக்க நமக்கு ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களையும் காப்பதோடு அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x