Published : 24 Jun 2018 04:18 PM
Last Updated : 24 Jun 2018 04:18 PM
ஏடிஎம் மோசடி வழக்கில் சந்துருஜிக்கு மூளையாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆடி கார் தொடங்கி ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் வங்கிக்கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தெரிந்தது. இதன் பின்னணியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருப்போர் தொடங்கி கடைக்காரர்கள், அரசியல் பின்னணி உடையோர் என 11 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் தேடப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 60 நாட்களைத் தாண்டி தலைமறைவாக உள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சந்துருஜிதான் மூளையாக செயல்பட்டதாக சிபிசிஐடி குறிப்பிட்டு வந்தது.
இந்நிலையில் சந்துருஜியைத் தாண்டி முக்கியக்குற்றவாளிகள் மூவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக எஸ்எஸ்பி ராகுல் அல்வால் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
சந்துருஜியின் மூளையாகச் செயல்பட்ட திருப்பூர் அவினாசி திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த பீட்டர் (38), கோவை ராமகிருஷ்ணாபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த தினேஷ் (33) ஆகியோரை சிபிசிஐடி தனிப்படை கைது செய்தது.
மரைன் இன்ஜினியிரிங் பிரிவில் பட்டதாரியான பீட்டர், டூர் ஏஜென்சி நடத்தி வருகிறார். தினேஷ், பிஏ முடித்து விட்டு கோவையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி ஆன்லைனில் தவறான முறையில் கிரெடிட் கார்டு தகவல்களை பெற்று, ஸ்வைப்பிங் மெஷின் மூலம் சட்டவிரோதமாக ரூ. 1.05 கோடி பணப் பரிமாற்றம் செய்துள்ளனர். அதற்கு கமிஷனாக சந்துருஜிக்கு பல லட்சம் தந்துள்ளனர்.
மேலும் தினேஷ் கடந்த 2017ல் கோவையில் உள்ள சைபர் கிரைம் காவல்நிலையத்தில் இதேபோன்று ஏடிஎம் வழக்கில் கைதானவர் என்பதும் தெரிய வந்தது.
இவர்களிடம் விசாரித்த போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. அதையடுத்து அவரும் கைதானார். அவர் பீட்டருடன் இணைந்து ஸ்வைப்பிங் மெின்களை வைத்து குற்றம் செய்துள்ளார். இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் பதிவு செய்யும் ஏஜென்சி நடத்தி வருவதும் தெரிந்தது.
பீட்டரிடமிருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், பல வங்கிகளின் பணப் பரிவர்த்தனை அட்டைகள் 5, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷிடமிருந்து ஒரு இண்டிகோ கார் பறிமுதல் செய்துள்ளோம். அதேபோல் இர்பான் ரகுமானிடம் ரூ.88 லட்சம் மதிப்புள்ள ஆடி கார், 4 லேப்டாப், பல வங்கிகளின் செக் புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்துள்ளோம். கைப்பற்றப்பட்டவை மதிப்பு ரூ.1 கோடியாகும்''.
இவ்வாறு ராகுல் அல்வால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT