Published : 19 Oct 2024 05:27 AM
Last Updated : 19 Oct 2024 05:27 AM
சென்னை: பணி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், தென்மண்டல காப்பீட்டு தொழிலாளர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த், அகில இந்திய லோகோ ரன்னிங் ஊழியர் சங்க மத்திய அமைப்பு செயலாளர் வி.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பேசியதாவது: சமீபத்தில் பல ரயில் விபத்துக்களுக்கு ரயில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் தொடர் இரவுப் பணிகள், போதுமான ஓய்வின்மை, நீண்ட பணிநேரம் போன்ற அடிப்படைக் காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுவதை பல விபத்து விசாரணை அறிக்கைகள் மற்றும் வல்லுநர் குழுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ரயில்வே சட்டம்பிரிவு 133(2)-ன் படி, ரயில் ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் நான்கு 30 மணிநேரம் அல்லது ஐந்து 22 மணி நேரம் வாராந்திர ஓய்வு வழங்க வேண்டும்.
ரயில்வே பாதுகாப்பு உயர்நிலை குழு உட்பட பல விபத்து விசாரணை ஆணையங்களும் ரயில் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் வாராந்திர ஓய்வு குறித்து பரிந்துரைகள் வழங்கினாலும், ரயில்வே நிர்வாகம் ஏற்க தயாராக இல்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தெற்கு ரயில்வேயின் ரயில் ஓட்டுநர்கள் சட்டப்பூர்வ வாராந்திர ஓய்வு எடுத்த பிறகுதான் பணிக்கு வருவோம் என்று கூறுகின்றனர்.
அதற்காக அவர்கள் மீது தெற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, ரயில்வே துறை அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டதன் விளைவாக 2 கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஒரு மாதத்துக்குள் அறிக்கை வந்தவுடன் தீர்வு காணப்படும் என கூறப்பட்ட நிலையில், 3 மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே, சரக்கு ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாகவும், பயணிகள் ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 6 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும். தற்போது தொடர்ச்சியாக 4 நாட்கள் இரவுப் பணி என்பதை 2 நாட்களாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT